Search This Blog

Sunday, August 7, 2011

பிரபத்யே

மந்திரங்களின் முடிவில் "பிரபத்யே' என்ற சொல் வருகிறது. உதாரணமாக, "வேங்கடேச சரணௌ சரணம் பிரபத்யே', "லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே' என்ற மந்திரங்களை எடுத்துக் கொள்ளலாம். "பிரபத்யே' என்றால் "சரணடைகிறேன்' என்று பொருள். "பிரபத்தி' என்ற சொல்லில் இருந்து இது உருவானது. இறைவனிடம் பக்தி செலுத்துதலுக்கும், சரணடைதலுக்கும் வித்தியாசம் உண்டு. பக்தியை குரங்குக்குட்டி என்றால், பிரபத்தியை பூனைக்குட்டி என்பர். தாய்க்குரங்கு மரம் விட்டு மரம் தாவும் போது, குட்டிக்குரங்கு தன் இருகைகளால் தாயைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். தாய்க்குரங்கு தன்னைக் கீழே விடாது என்று குட்டிக்குரங்கு நம்பினாலும். முன்னெச்சரிக்கையாக தன் கைகளால், தாயை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது. அதாவது, சற்றாவது தன்னை நம்புகிறது. அதுபோல, கடவுளை நம்புவதோடு சுயநம்பிக்கையும் கொண்டு வாழ்வதே பக்தி.
தாய்ப்பூனை எங்கு சென்றாலும், குட்டியைத் தன் வாயால் கவ்விக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லும். குட்டிப்பூனை இதற்காக எந்த முயற்சியும் செய்வதில்லை. அதாவது தன்னை முழுமையாக தாயிடம் ஒப்படைத்து விட்டது. அதுபோல கடவுளிடம் சரணடைந்து, ""எல்லாவற்றையும் அவன் பார்த்துக்குவான்!' என்ற நிலையில் இருத்தலே பிரபத்தி. பக்தியை விட பிரபத்தி வழி சுலபமானதும் கூட. ஆனால், அதற்கு ஆழமான நம்பிக்கை அவசியம். பெயருக்கு மந்திரம் சொல்லாமல், ஆழமான நம்பிக்கையுடன் சொன்னால் துன்பங்கள் வந்தாலும்அதன் தீவிரம் நம்மைத் தீண்டுவதில்லை

No comments: